உத்தரப்பிரதேசத்தில், அடுத்த 4 ஆண்டுகளில், சுமார் 75000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொலைத்தொடர்பு இணைப்புகள் வழங்குவது, 5ஜி இணைய சேவைகள் வழங்குவது, சில்லறை வணிகம் மற்றும் எரிபொருள் வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் முதலீடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச முதலீட்டாளர் மாநாட்டில் இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில், ரிலையன்ஸ் குழுமம் சார்பில், 10 ஜிகாவாட் திறன் உடைய புதுப்பிக்கத்தக்க பயோ எரிவாயு வர்த்தகம் தொடங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், ரிலையன்ஸ் குழுமத்தின் முதலீடுகள் மூலமாக, மாநிலத்தில் சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.