அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீதான லஞ்ச வழக்கில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அமெரிக்கா, இதுதொடர்பாக இந்திய சட்ட அமைச்சகத்தின் உதவியை கோரியுள்ளதாக நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஹேக் சேவை ஒப்பந்தத்தின் கீழ், அதானிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதானி குழுமம் மற்றும் இந்திய அரசு எந்த பதிலும் வழங்கவில்லை.
இந்த விவகாரம், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு வெளியானது. இதுகுறித்து ராகுல் காந்தி, பிரதமர் மோடி அதானியின் ஊழலை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டினார். 2020-24 காலகட்டத்தில் தமிழகம், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சோலார் மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களுக்காக ரூ.2,100 கோடி லஞ்சம் வழங்கியதாகவும், இது மறைக்கப்பட்டு அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீடு பெற்றதாகவும் புகார் உள்ளது. இதனால், நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் மேலும் ஆறு பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.














