அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட உள்ளது, மேலும் 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா ஆகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பை அமல்படுத்த உள்ளது. இதற்கிடையில் ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி, 6 இந்திய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட நிறுவனங்களில் அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட், ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட், ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ, பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் மற்றும் காஞ்சன் பாலிமர்ஸ் ஆகியவை அடங்கும்.