செவ்வாய் கிரகத்தின் ஆழமான நிலத்தடிப் பகுதியில் பெருங்கடல் அளவுக்கு தண்ணீர் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் இன்சைட் லேண்டரில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த தண்ணீர் செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து 11.5 முதல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் பாறை இடுக்குகளில் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்பதை குறிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான கோட்பாட்டை இது வெகுவாக ஆதரிக்கிறது. இந்த ஆய்வை வழிநடத்திய வாஷன் ரைட், பழங்காலத்தில், செவ்வாயின் மேற்பரப்பு நீர் விண்வெளிக்குச் செல்லாமல் நிலத்தடியில் உறிஞ்சப்பட்டுள்ளது என்று கூறுகிறார். மேலும், இந்த நீர் மிகவும் ஆழத்தில் உள்ளதால், அதை அடைவது மிகக் கடினமாக இருக்கும் என்கிறார்.