சென்னை-நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவை அக்டோபரில் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட நெல்லை வந்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ரெயில் நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரெயில் நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும். இந்த திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய உடன் நெல்லை ரெயில் நிலையம் சீரமைக்கும் பணி சில வருடங்களுக்குள் முடிக்கப்படும். மேலும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.














