விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணைகள் ரஷ்யாவிடம் உள்ளன. இந்நிலையில், உக்ரைன் நாடு ரஷ்யா மீது போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, மேலை நாடுகளின் செயற்கைக் கோள்கள் துணைபுரிவதாக தெரியவந்துள்ளது. இதனால், அந்த செயற்கைக் கோள்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து, ஐநா சபையின் ஆயுத கட்டுப்பாட்டு குழுவுக்கான ரஷ்ய பிரதிநிதி கொன்ஸ்டாண்டின் வோரோன்சோவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சான் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில், சமீப காலமாக தீவிர தாக்குதல் நடைபெறுகிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதிகள் இருந்தாலும், உக்ரைன் ராணுவத்தினர் எதிர் தாக்குதல் செய்து முன்னேறி வருவது கவனிக்கத்தக்கது. உக்ரைன் ராணுவத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபடுவதற்கு, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள், தங்கள் செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தந்து உதவி செய்கின்றன. வணிகப் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ள செயற்கைக் கோள்களை இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது அபாயகரமானது. இதனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய செயற்கைக் கோள்கள், ரஷ்ய தாக்குதலுக்கான சட்டபூர்வ இலக்குகள் ஆகி உள்ளன” என கூறப்பட்டுள்ளது.














