கௌதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பில் தொடர் சரிவு ஏற்பட்டதால், அவர் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியல் அடிப்படையில், அவரது தற்போதைய சொத்து மதிப்பு 96.5 பில்லியன் டாலர்களாக உள்ளது. இவர் கடந்த சில நாட்களில் மட்டும், சுமார் 22.7 பில்லியன் டாலர்களை, அதாவது 19% சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' என்ற அமெரிக்க முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பற்றிய அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அதில், அதானி குழுமம், பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகவே அதானி நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வந்தன. மேலும், கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை ஆதாரம் அற்றது எனவும், தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அதானி குழுமம் கூறி வருகிறது.