உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்வதற்கான சதி திட்டத்தை முறியடித்ததாக அந்நாட்டு பாதுகாவல் படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான சதி திட்டத்தில் இரண்டு பாதுகாவல் படை உயரதிகாரிகள் ஈடுபட்டதாகவும், அந்த சதி திட்டத்தை முறியடித்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாவல் படை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தை ரஷ்யாவின் தேசிய பாதுகாவல் படை தீட்டி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக உக்ரைன் பாதுகாவல் படையை சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளை ரஷ்யா ஈடுபடுத்தி உள்ளது. அவர்களை கண்டறிந்து கைது செய்துள்ளோம். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்பே ரஷ்ய பாதுகாவல் படையால் இந்த இரு அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்யா முயல்வதாக உக்ரைன் பலமுறை குற்றம் சாட்டி இருந்தது. இதுவரை 10 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜெலன்ஸ்கி உள்ளிட்ட தலைவர்கள் வந்து செல்லும் எல்லை நகர விமான நிலையம் மற்றும் அண்டை நாடான போலந்திலும் தாக்குதல் நடத்த உக்ரைன் உயர் அதிகாரிகள் ரஷ்ய உளவு அமைப்புடன் இணைந்து சதி திட்டம் தீட்டினர் என்று கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி அந்த இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.