உணவு விநியோகம் மற்றும் விரைவு வர்த்தகம் என இரண்டு துறைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள ஜொமாட்டோ நிறுவனம், தற்போது டைனிங் சேவைகள் மற்றும் நிகழ்வு டிக்கெட் முன்பதிவுகளுக்கான புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. 'டிஸ்ட்ரிக்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும்.
ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், ஜொமாட்டோவின் டைனிங்-அவுட் வணிகம் ஏற்கனவே லாபம் ஈட்டி வருவதாகவும், வருடாந்திர மொத்த ஆர்டர் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புதிய செயலியின் மூலம் திரைப்படங்கள், விளையாட்டு, நேரடி நிகழ்ச்சிகள், ஷாப்பிங் போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ரிலையன்ஸ் ஆதரவு பெற்ற புக்மைஷோ உடன் போட்டியிட்டு, முன்னணி தளமாக 'டிஸ்ட்ரிக்ட்' செயலி மாறும் என எதிர்பார்ப்பதாக கோயல் தெரிவித்துள்ளார்.