தமிழகத்தின் பழங்குடியின மக்களின் மொழிகளைப் பாதுகாக்கும் வகையில், மொழிப்பெட்டி என்ற முறையை பழங்குடியினச் செயல்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் காடர், மலை மலசர், முதுவார், கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் போன்ற 36 வகை பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்து, ஒவ்வொரு பழங்குடியினரும் தங்களுக்கானத் தனி மொழியைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் அவை அழிந்து, தற்போது அந்த மொழிகளுக்கு பேச்சு வழக்கு மட்டுமே எஞ்சியுள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த வயதானவர்கள் மட்டுமே அவரவர் மொழியின் எழுத்து வடிவத்தை அறிந்துள்ளனர். எனவே, இந்த மொழிகளை அழிவில் இருந்து மீட்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோத்தகிரி செம்பனார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து, 'மொழிப்பெட்டி’ என்ற திட்டத்தை, பழங்குடியினச் செயல்பாட்டாளர்கள் செயல்படுத்தியுள்ளனர். இதன்படி, தினம்தோறும் பழங்குடியின மாணவர்கள் தங்களது மொழியில் இருந்து இரண்டு வார்த்தைகளைத் தாளில் எழுதி இந்தப் பெட்டியில் போட வேண்டும். ஆண்டின் இறுதியில் பழங்குடியின மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டு, குழந்தைகளுக்குப் பரிசு வழங்கப்படும். இதுகுறித்து பேசிய பழங்குடி இன செயற்பாட்டாளர் ஒடியன் லட்சுமணன், "ஒரு மொழி அழியும் பொழுது ஒரு இனத்தின் அடையாளம் அழிந்து போகிறது. அந்த வகையில், பழங்குடியின மக்களின் மொழி, இடம்பெயர்வு, வாழ்க்கைச் சூழல் மாற்றம் போன்ற பல காரணங்களால் வேகமாக அழிந்து வருகிறது. பழங்குடியினரின் இன்றையத் தலைமுறைக்கு மொழியின் எழுத்து வடிவம் தெரியவில்லை. மேலும், பலர் தங்களது பழங்குடியின மொழியில் பேசுவதை முழுமையாகத் தவிர்த்து விட்டனர். எனவே, பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில், அவர்களின் மொழி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக, மொழிப்பெட்டி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று கூறினார். இதன் மூலம், பழங்குடியின மக்களின் மொழிக்கு அகராதி உருவாக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.














