சைபர் கிரைம் மோசடிகள் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 3 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஜனவரி மாதம் முதல் கடந்த வாரம் வரை, ஓராண்டில் 1,496 பேர் சைபர் க்ரைம் கும்பல் மூலம் 3 கோடி ரூபாயை இழந்தது புகார்கள் மூலம் தெரியவந்துள்ளது. பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் அளித்ததன் பேரில் 15.35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில், சம்மந்தமே இல்லாமல் மொபைல்போனுக்கு வரக்கூடிய லிங்க், 'கியூஆர் கோடு' எதையும் கண்டு கொள்ளக்கூடாது. பரிசு விழுந்துள்ளதாக கூறி வரும் பார்சல்களை வாங்குவதோ அல்லது அதனை திருப்பி அனுப்ப ஓ.டி.பி., எண்ணைக் கேட்டாலோ தரக் கூடாது. சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.