அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் நேற்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதன் காரணமாக நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசா குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பிலடெல்ஃபியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், அங்கிருந்து லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டது. இதுவரை இந்தியர் யவரும் காயமடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் ஜப்பானில் மூன்றாவது முறையாக போன்ஷு நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. இதே போல் மியான்மர் நாட்டில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வரவில்லை.