பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜோமாட்டோவின் சந்தா திட்டமான ஜோமாட்டோ கோல்ட் சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. அதன் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக ஜோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டீசர் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் பதிவிட்டுள்ளார். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோமாட்டோ கோல்ட் திட்டம் ஜோமாட்டோ ப்ரோ ஆக மாற்றப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜோமாட்டோ ப்ரோ, ஜோமாட்டோ ப்ரோ பிளஸ் போன்ற சந்தா திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. வர்த்தக காரணங்களுக்காக இவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் தொடங்கப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஜோமாட்டோ கோல்ட் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.