நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஜுன் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் மூலதனம், நெசவு இயந்திரம் வாங்குதல் உள்ளிட்ட நெசவுத் தொழில் தொடர்பான பணிகளுக்காக சலுகைக் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, தனிப்பட்ட நெசவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், நெசவாளர் அமைப்புகளுக்கு ரூ.20 லட்சம் மானியக் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முத்ரா கடன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் ரூ.508 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும்.














