பொது பெட்டியில் பயணம் செய்வோருக்கு குறைந்த கட்டணத்தில் உணவு விநியோகம் செய்ய உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, 20 ரூபாயில் உணவும், 50 ரூபாயில் தின்பண்டமும் வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகள் பொதுப்பெட்டிக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் உணவுடன் சேர்த்து குடி தண்ணீர் பாட்டில்களை மலிவு விலையில் வழங்க உள்ளதாக கூறியுள்ளது. ஆறு மாத காலத்திற்கு இந்த திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பயன் தரும் வகையில், குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 22 முதல் 26 ஸ்லீப்பர் மற்றும் பொது பெட்டிகளை கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.














