பார்தி ஏர்டெல் நிறுவனம், மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு ரூ.3,626 கோடி தொகையை முன்கூட்டியே செலுத்தி, 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த அனைத்து ஸ்பெக்ட்ரம் கடன்களையும் முழுமையாக தீர்த்துள்ளது. இதற்கு முன்னர், 2024 ஆம் ஆண்டில், 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டு கடன்கள் உட்பட மொத்தம் ரூ.28,320 கோடி தொகையை ஸ்பெக்ட்ரம் கடனாக செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது நெட்வொர்க்கை மேம்படுத்தும் நோக்கில், ஏர்டெல் நிறுவனம் நோக்கியா நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், 4G மற்றும் 5G தொழில்நுட்பத்துக்கான உபகரணங்களை வாங்கி, தனது நெட்வொர்க்கை நவீனமயமாக்க உள்ளது. இதற்கிடையே, பீகார் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கையின் கீழ் மானியம் பெறும் வகையில் ஏர்டெல் நிறுவனம் திட்டங்களை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக முதல் கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக பீகார் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் அபய் குமார் தெரிவித்துள்ளார்.














