பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை. பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர். இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆவர்.
யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய , மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.