சோமாலியா கடற்பகுதியில் வணிக கப்பல் ஒன்று 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் பதினைந்து இந்தியர்களுடன் வணிக கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத ஐந்து முதல் ஆறு பேர் ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தினர் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், சோமாலியா கடற்பகுதியில் வணிக கப்பல் எம் வி லீ நார்போல் கடத்தப்பட்டுள்ளது. இதில் 15 இந்தியர்கள் உள்ளனர். கடத்தப்பட்ட கப்பலை சுற்றியுள்ள நிலையை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை கப்பலை நோக்கி நகர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இந்திய கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலையை உன்னிப்பாக கண்காணிக்கிறது. வணிக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் நட்பு நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை செயல்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.