2ஜி அலைகற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி அலைக்கற்றை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு ஏற்பட்டு அரசுக்கு ரூபாய் 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதில் அப்போதைய மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் திமுக எம்பி கனிமொழியும் சேர்க்கப்பட்டு அவரும் அதை ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கபபட்டது. இதில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதனை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மனுவினை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் டெல்லி
ஐகோர்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக விசாரணை நடந்தது. பின்னர் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை வருகிற மே மாதத்திலிருந்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.