மலேசிய தீபகற்பம் மற்றும் தெற்கு தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவில் மலேசியாவில் 6 பேரும், தாய்லாந்தில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள தும்பட் மற்றும் தனா மேரா போன்ற நகரங்களில் நவம்பர் 26 முதல் 30 வரை 1167 மிமீக்கும் மேற்பட்ட மழை பதிவாகியுள்ளது. தெரெங்கானுவில் பெசுட் நகரில் 1761 மிமீ மழை பதிவாகியுள்ளது. மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், “இவ்வளவு கனமழை முன்னெப்போதும் இல்லாதது. வெறும் 5 நாட்களில் 6 மாதங்களுக்கு சமமான மழைப்பொழிவு பெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பேரழிவில் மலேசியாவில் 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதில் 85,000 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர். அண்டை நாடு தாய்லாந்தில் 300,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து அரசு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 9,000 பாட் நிதியுதவி அளிக்கிறது. வரும் நாட்களில் மலேசியாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 8 முதல் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலும் டிசம்பர் 3 முதல் 5 வரை திடீர் வெள்ளம் மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.