தெலுங்கானா அரசுக்கு பயிர் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அளித்த அனுமதியை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.
தெலுங்கானாவில் வருகிற 30-ஆம் தேதி மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து கொண்டு உள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா அரசின் ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்திருந்தது. இதில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த நிதி உதவியை வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும் வேட்பாளருமான ஹரீஷ் ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. மேலும் விவசாயிகள் வங்கி கணக்குகளில் நேரடியாக நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்காலிகமாக தேர்தல் முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.