பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக விண்வெளி துறையை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயில் சிறை தண்டனை விதித்து நாகபுரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உள்ளது. இங்குள்ள ஏவுகணை மையத்தில் நிஷாந்த் அகர்வால் என்பவர் பொறியாளராக பணியாற்றினார். இவர் பிரமோஸ் ஏவுகணை சார்ந்த பணியில் நான்காண்டுகள் பணியாற்றினார். அப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ க்கு முக்கிய தொழில்நுட்ப தகவல்களை கசிய விட்டார். இது தொடர்பாக அவர் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாகபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 235 பிரிவின் கீழ் நிஷாந்தை குற்றவாளி என்று நீதிபதி தேஸ்பாண்டே தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து நிஷாந்துக்கு ஆயுள் தண்டனை, 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 3000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.














