இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா பின் சையது அல் நயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற அவர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பார்வையிட்டார். இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்தாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அங்குள்ள வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இரு நாடுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். சென்ற ஆண்டு அபுதாபியில் ஐஐடி தில்லி வளாகத்தின் கிளை ஒன்று திறக்கப்பட்டது. இந்தியாவின் ரூபே அட்டையை அடிப்படையாகக் கொண்டு யுஏஇ உள்நாட்டு கடன் மற்றும் பற்று அட்டைகள், இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன.
மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.