கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு வழங்கப்படும் விசா நடைமுறைகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை விசா சேவை நிறுத்தப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதியாக அறியப்படும் ஹர்தீப் சிங் நிஜார், சில வாரங்களுக்கு முன்னால் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தி இருந்தார். அதை தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக, இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரியை இந்தியா வெளியேறும்படி அறிவித்தது. தற்போது, கனடா குடிமக்கள் இந்தியா வருவதற்கு தேவைப்படும் விசா நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும், கனடாவில் உள்ள இந்திய இந்துக்களுக்கு ஆபத்து நேரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றும் கனடா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.