அண்மையில், அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில், வாகனக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல புதிய அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியில், ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் (AERWINS) என்ற நிறுவனத்தின் பறக்கும் பைக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தூரிஸ்மோ ஹோவர் பைக் (XTURISMO Hover Bike) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பைக், உலகின் முதல் பறக்கும் பைக் என்று கூறப்படுகிறது.
இந்த பைக் ட்ரோன் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக், தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை, மணிக்கு 99 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஏர்வின்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சுகை கொமாத்சு (Shuhei Komatsu), “ஜப்பானில் இந்த பைக்கின் விற்பனை துவங்கிவிட்டது. இதே பைக் மாடலின் சிறிய வடிவம் அமெரிக்காவில் அடுத்த ஆண்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்று கூறினார். இந்த பறக்கும் பைக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 6.2 கோடி என்று கூறப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலகின் முதல் பறக்கும் பைக் குறித்த வீடியோவை பிரபல ராய்ட்டர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்பின்னர், இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.