ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இன்று உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்திற்கு சென்று, அதிபர் விளாடிமிர் ஜெகன்ஸ்கியை சந்திக்க உள்ளார். சீன அதிபர் ரஷ்யா சென்றுள்ள அதே நேரத்தில், ஜப்பான் பிரதமர் உக்ரைனுக்கு செல்வது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, அவர் உக்ரைன் செல்கிறார். மேலும், அவரது பயணம் திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜி7 கூட்டமைப்பு நாடுகளில், ஜப்பான் தலைமை மட்டுமே உக்ரைனுக்கு செல்லாமல் இருந்தது. தற்போது, ஜப்பானும் உக்ரைனுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.
இது தொடர்பாக, ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜெலன்ஸ்கி தலைமையில், உக்ரைன் நாட்டு மக்கள் வலிமையுடனும், பொறுமையுடனும் நாட்டிற்காக போராடி வருவதற்கு கிஷிடா மரியாதை செலுத்த உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பார் எனவும், சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.