செப்டம்பர் 24ஆம் தேதி முதல் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.தமிழகத்தில் சென்னை-கோவை இடையே முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் திட்டத்திற்கு மக்களிடையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான பிட் லைன் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்தே பாரத் ரயிலுக்கான வண்டி எண் கடந்த வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 20632 என்ற எண் நெல்லை-சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், 20631 என்ற எண் சென்னை - நெல்லை ரயிலுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 24-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கவுள்ளார் . இதில் தென்னக ரயில்வே கோட்டத்தில் காசர்கோடு- திருவனந்தபுரம், சென்னை- விஜயவாடா, நெல்லை-சென்னை ஆகிய மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளது . இது 8 பெட்டிகளை கொண்டிருக்கும். சுமார் 660 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் அடையும். இதில் ஒரு பெட்டி வி. ஐ.பி களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்கும் படி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஐபி பெட்டியில் பயணம் செய்ய ரூபாய் 2800 முதல் 3000 வரையிலும், மற்ற பெட்டிகளில் தனிநபர் ஒருவருக்கு 1200 முதல் 1300 வரை கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.














