ட்விட்டரை கையகப்படுத்திய எலோன் மஸ்க்கின் AI ஸ்டார்ட்அப் ஆன xAI நிறுவனம், தற்போது பெரும் வெற்றியை கண்டுள்ளது. அதனால், xAI-யில் முதலீடு செய்த ஃபிடிலிட்டி, ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, செக்வோயா கேபிடல் மற்றும் ஆண்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் ஈட்ட உள்ளனர். கிட்டத்தட்ட 25% பங்கு பங்களிப்பு அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் xAI நிறுவனம் $5 பில்லியன் நிதியை ஈர்த்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு $50 பில்லியனாக இரட்டிப்பாகியுள்ளது. இது எலோன் மஸ்க்கின் ட்விட்டர் கையகப்படுத்துதல் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளது. ஏனெனில், ட்விட்டரின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், xAI-யின் இந்த வெற்றி அவர்களது இழப்பை ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளது. மார்கன் ஸ்டான்லி மற்றும் பார்க்லேஸ் போன்ற வங்கிகள், ட்விட்டரில் சுமார் $13 பில்லியன் கடன் வழங்கியுள்ளன. xAI-யின் இந்த வெற்றி அவர்களுக்கும் நல்ல பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.