கடந்த 6 மாதங்களாக பிரபல செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா மிகப்பெரிய உயர்வை சந்தித்து வருகிறது. செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியில் இருக்கிறது. அந்த வகையில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. அவர் உலக அளவில் 13 வது பணக்காரராக முன்னேறி உள்ளார்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பு 700% உயர்ந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் 93 பில்லியன் டாலர்களை அவர் சம்பாதித்துள்ளார். இன்றைய நிலையில் அவரது சொத்து மதிப்பு 106 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தொடர்ந்து என்விடியா சந்தை மதிப்பு உயர்ந்து வருவதால், விரைவில் அவர் உலகின் தலைசிறந்த 10 பணக்காரர்கள் பட்டியலுக்குள் நுழைந்து விடுவார் என கூறப்படுகிறது.