12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதாக பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர் இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென அரசு முடிவெடுத்தது. இதையடுத்து அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.