செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண் விரிவு மையங்கள் திறந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துாரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஒரே இடத்தில் விவசாயம் சம்பந்தமான அனைத்து சேவைகளும் இனி கிடைக்கும் என்பதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் வட்டார வேளாண் துறைக்கு உட்பட்டு 39 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ வகைகளும் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன. பயிரிடும் விவசாயிகள், வேளாண் அலுவலகம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறைகளுக்கு சென்று ஆலோசனை மற்றும் இடு பொருட்கள் வாங்க வேண்டும். ஒவ்வொரு அலுவலகமும் வெவ்வேறு பகுதிகளில் இருப்பதால் வேளாண் சேவை பெற முடியவில்லை.
இப்பகுதிகளுக்கான விதைச்சான்று அலுவலர் அலுவலகம் செங்கல்பட்டிலும், வேளாண் பொறியியல் உதவி பொறியாளர் அலுவலகம் சென்னை நந்தனத்திலும் இயங்குகின்றன. இதனால், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020 - 21ல், தலா 2.20 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேளாண் திட்டங்களை எளிதாக பெற முடியும்.