நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தமிழகத்தில் முதல் முறையாக மீனவர்களின் நிதி மூலம் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், நம்பியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தை நேற்று காணொளி வாயிலாக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நம்பியார் நகர் பகுதியில் வசித்து வரும் 1300 மீனவக் குடும்பங்கள் அளித்த 11.43 கோடி ரூபாய் நிதி மூலம் கட்டப்பட்ட இந்த துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்தது. தமிழக அரசின் நிதியையும் சேர்த்து மொத்தம் 34.3 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் 182 மீட்டர் நீளம் உடையதாக சொல்லப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான படகுகளை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் திறக்கப்பட்டதை முன்னிட்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.