நமது சூரிய குடும்பத்தில், அதிக நிலவுகளை கொண்ட கோளாக வியாழன் கோள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில், புதிதாக 12 நிலவுகள் வியாழன் கோளை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டதால், சனிக்கோளை முந்தி வியாழன் கோள் அதிக நிலவுகளை கொண்ட கோளாக அறிவிக்கப்பட்டது. தற்போது, சனி கிரகத்தை சுற்றி நடத்தப்பட்ட புதிய ஆய்வுகளில், 62 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், சனி கிரகத்தின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. எனவே, மீண்டும் அதிக நிலவுகளை கொண்ட கோள் என்ற பெருமையை சனி கிரகம் பெற்றுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளுக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விரைவில் பல உலக சமயங்களில் உள்ள கடவுளரின் பெயர்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாசாவின் காசினி விண்கலம் சனி கிரகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில், சனி கிரகத்தின் தோற்றம் மற்றும் அதன் வளைவுகள் உருவாக்கம் குறித்த பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.