இந்திய விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இன்று 16000 கோடி ரூபாய் நிதியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்த நிதி நேரடி பலன் பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டது.
புதுடெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் சம்மேளனம் 2022 என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 12வது தவணையாக 16000 கோடி நிதியை விவசாயிகளுக்கு அவர் வழங்கினார். விழாவில் பேசிய அவர், “விவசாயிகள், வேளாண் தொடக்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறுகிறது. தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாய முறைகளை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். அதை நோக்கியே வேளாண் தொடக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக மகசூலை ஏற்படுத்தும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மேலும் 22 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் மற்றும் அறுவடை குறித்த விவரங்களை விவசாயிகள் தயார் நிலையில் வைத்திருக்க முடியும்” என்று கூறினார்.
மேலும், “ஒரே நாடு ஒரே உரம்” என்ற திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். அதன்படி, “பாரத்” என்ற ஒரே பிராண்டின் கீழ், யூரியா உரம் விற்பனை செய்யப்படும் என்று கூறினார். “இதன் மூலம், குறைந்த விலையில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்கப்படும். இது விவசாயத்துறைக்கு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று கூறினார். மேலும், இதன் மூலம், உரங்கள் உற்பத்தியில் இந்தியா சுயசார்பு நிலையை விரைவில் எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 பிரதான் மந்திரி கிசான் சம்ருதி மையங்களை பிரதமர் இன்று திறந்து வைத்தார். மேலும், “இந்தத் திட்டத்தின்படி, நாட்டில் உள்ள சில்லறை உர விற்பனை நிலையங்கள் படிப்படியாக பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி மையங்களாக மாற்றப்படும் இதன் மூலம் விவசாயிகளின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு சொட்டு அதிகப் பயிர்” என்ற திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனத்திற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். மண்வளத்தை பாதுகாக்கவும் நீர் வளத்தை சேமிக்கவும் இந்த திட்டம் உதவி செய்வதாக கூறினார். அத்துடன், இந்த விழாவில், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார். கிசான் ரயில் போன்ற திட்டங்களை அவர் உதாரணமாக தெரிவித்தார். மேலும், “பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் மூலசம், இதுவரை இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதி விவசாயிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.