சட்டநாதர் என்ற சட்டைமுனியும் பதினெண் சித்தர்களில் ஒருவர் தான். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர். இவர் போகரின் சீடர்.இவர் கடல் சூழந்த சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர். சேணிய வகுப்பைச் சேர்ந்தவர். இவரின் தாய், ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். சிங்கள நாட்டை விட்டு தமிழகம் வந்து இவர்கள் அனைவரும் விவசாயம் பார்த்து வந்தனர்.
வானம் பொய்த்தக் காரணத்தால் பஞ்சம் உண்டாகி விவசாயம் செய்து பிழைக்க வழியில்லாது போனது.சட்டைமுனி பெற்றோருக்கும் வயதாகிவிட்டதால் அவர்கள் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். இதனால் போதிய உணவுமில்லை. பட்டினியால் வாடிய பெற்றோர்களுக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின் வாசல்களில் யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார் சட்டைமுனி.
ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று அவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த போது வட நாட்டிலிருந்து வந்திருந்த சங்கு பூண்ட முனிவர் ஓருவரைக் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர் விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் நடக்கும். இவ்வளவு சூழலிலும் நீ உன் தாய், தந்தையரை காப்பாற்ற செய்த செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயல் விரைவில் உன் நிலை மாறும். சிவன் மீது சிந்தனையை நிறுத்தி உன் கடமையை தொடர்ந்து செய்.” என்று சொல்லிச் சென்றார்.
இதனால் சட்டை முனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிப்பட தவறவில்லை.
பின் ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டு கோவிலில் இருந்து வெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதறிவிட எண்ண மில்லையா? ‘ என கேட்க சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் பார்த்தார். அவர் காலடியில் வீழுந்து, ஐயா வழிகாட்டுங்கள்’ என்றார். அதற்கு அவர் உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்று கேட்டார். ஆம் ஐயா என்று கூறி தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார் அந்த முனிவர்.
சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்த செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து அந்த முனிவரிடமே கேட்க அவர் அதற்கு ‘இதில் ஒன்றும் வியப்பில்லை. இரசமணியின் சக்தியால் இது சாத்தியமானது. இது போகப்போக உனக்கும் விளங்கும்” என்றார். அந்த முனிவரின் அறிவுரைகளை கேட்டு அவருடனேயே சுற்றி வந்த சட்டைமுனி. இறுதியில் போகரைச் சந்தித்து அவர் சீடராகி சித்தர்களின் வழியில் தன் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார்.போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர், கருவூரார் போன்ற பல சித்தர் பெருமக்களோடு சட்டைமுனிக்கு இனிய தொடர்பும் ஏற்பட்டது.
பின் கொஞ்சகாலம் அகத்தியரிடமும் சீடராகச் இருந்து, ஞான நிலையினை அடையும் வழியை கற்றார். அவரின் விடாமுயற்சியால் ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். அவரின் தவத்தால் கைலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியமும் பெற்றார். ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின் வைப்பு, நிகண்டு, வாத காவியம், தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார்.”
பின் சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து பல வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார். தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் இப்புவியில் உள்ளவர்களுக்கு எடுத்துக் காட்ட, சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது என்றும் அதில் பல வேதியியல் விந்தைகள், விவரிக்க முடியாத அதிசயங்கள், அற்புதங்கள் நிறைந்துள்ளது.
மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக் குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சூட்சம மொழியிலேயே எழுதி வைத்திருப்பார்கள். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும், இன்னும் சில பயனுள்ள தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வந்த காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொள்வாராம். ஒருமுறை அந்த கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக சென்றார். ஆனால் பூஜை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. அதனால் ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன.
திருவரங்கநாதரின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.














