இந்தியாவைச் சேர்ந்த சமூக ஊடகத் தளமான ஷேர்சாட், 100 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், இந்த நிறுவனத்தின் கேமிங் செயலியான ஜீட் 11-ன் செயல்பாடுகளும் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஜீட் 11 என்பது பேண்டஸி கிரிக்கெட் ஆன்லைன் கேம் செயலி ஆகும். எம்பிஎல் ட்ரீம் 11 போன்ற செயலிகளுடன் போட்டியிட இயலாமல் இந்த செயலி நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்சாட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார். இதனால் நிறுவனத்தைச் சேர்ந்த 5% பணியாளர்கள் நீக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஷேர்சாட் நிறுவனம், கடந்த வருடம், 913 மில்லியன் டாலர்கள் வருவாயை பதிவு செய்து, யூனிகார்ன் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்தது. தற்போது, இந்த நிறுவனம் உட்பட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே, பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டெய்லி ஹன்ட், ஜோஷ் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரிசையில், ஷேர்சாட்டும் இணைந்துள்ளது.