ஜப்பானின் சோனி மற்றும் ஹோண்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், ஒன்றிணைந்து, மின்சார வாகனம் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு, “சோனி ஹோண்டா மொபிலிட்டி” கூட்டமைப்பு நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்லைனில் இதன் விற்பனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இந்த வாகனங்கள் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய மின்சார வாகனம், பிரீமியம் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில், சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய மென்பொருள் அம்சம் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு மற்றும் கட்டண வசதிகள் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த அம்சத்தின் மூலம், வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் பிற அம்சங்கள், பேட்டரி திறன், விலை உள்ளிட்டவை குறித்த உறுதியான திட்ட வரைவு இன்னும் முடிவாகவில்லை. ஆனால் இந்த மின்சார வாகனத்தை, ஒரு கைபேசியை போல் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்சார வாகனத்தில் சென்சார்கள் மற்றும் தானியங்கி ஓட்டுநர் அமைப்பு உள்ளிட்டவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெஸ்லா, ஜெனரல் மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள், கைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாத ஓட்டுநர் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சோனி ஹோண்டா மொபிலிட்டி கூட்டுறவு நிறுவனத்தின் தலைவராக Izumi Kawanishi நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய மின்சார வாகனத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. ஓஹையோவில் உள்ள ஹோண்டா உற்பத்தி ஆலையில் இந்த வாகனம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2025 இல் அமெரிக்காவிலும், 2026 இல் ஜப்பானிலும் இந்த வாகனம் வெளியிடப்பட உள்ளது. மேலும், ஐரோப்பாவிலும் இந்த வாகனத்தை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த திட்டங்கள் எதுவும் முடிவாகவில்லை. வாகனத்திற்கான முன்பதிவுகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.