ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் எலைட் நிறுவனங்கள் பட்டியலில் டாடா குழுமமும் இணைய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் தைவானின் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் செயல்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம், ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாக டாடா மாறவுள்ளது. ஐபோன் உற்பத்தியில் சீனாவின் பாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனமும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய நிறுவனம் ஒன்று, ஐபோன் தயாரிப்பில் ஈடுபடுவது சீனாவிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்தியச் செயல்பாடுகளின் பங்குகளை டாடா நிறுவனம் வாங்கக் கூடும், அல்லது, இரு நிறுவனங்களும் இணைந்து புதிய உற்பத்தி மையம் ஒன்றைத் தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், தற்போது விஸ்ட்ரான் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஐபோன் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. அத்துடன், டாடா நிறுவனம், விஸ்ட்ரான் நிறுவனத்தின் பிற துறைகள் சார்ந்த பங்குகளையும் வாங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், மின்னணு மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியில் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, கர்நாடகாவில் இயங்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி மையத்துடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனமும் ஐபோன் மின்னணு பாகங்கள் உற்பத்திக்கு சீனாவை சார்ந்து இருப்பதைத் தவிர்க்க எண்ணுகிறது. மேலும், தனது விநியோகத்தை இந்தியாவில் அதிகப்படுத்த விரும்புகிறது. இதனால், டாடா குழுமம் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை