டாடா குழுமத்தை சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனம் தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை அண்மையில் வெளியானது. இதன் எதிரொலியாக, இன்றைய வர்த்தக நாளில், தேஜஸ் நெட்வொர்க்ஸ் பங்குகள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்தன. கிட்டத்தட்ட 15.5% அளவுக்கு உயர்ந்து, தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1046.95 ரூபாய்க்கு இன்று வர்த்தகமானது.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 147 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 1171 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 343% உயர்வாகும். மேலும், ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் நிதி ஆண்டில், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 168% உயர்ந்து 2471 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிறுவனங்களுடன் தொலைத்தொடர்பு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கையெழுத்திட்டதன் விளைவாக இந்த உயர்வு பதிவாகியுள்ளது.