கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கோவிட் 19 பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட் பெருந்தொற்றால் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய அறிவிப்பின் முக்கிய நோக்கம் இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதைத் தெரிவிக்கவே. மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவித்தார்.