மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனப் பகுதியில், ரியோ டின்டோ குழுமத்தின் சுரங்க அமைப்பு உள்ளது. இந்நிலையில், அங்கு ஒரு சிறிய மாத்திரை அளவிலான கதிரியக்கப் பொருள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கதிரியக்கப் பொருள் வெளிவந்தால், மேற்கு ஆஸ்திரேலியா மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, இதனை மிக தீவிரமான எச்சரிக்கையாக விடுப்பதாக ரியோ டின்டோ தெரிவித்துள்ளது.
இந்த கதிரியக்கப் பொருளின் அளவு 8 மில்லி மீட்டர் நீளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதிரியக்க பொருளான சீசியம் 137 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதிரியக்கப் பொருள் வெளியே வந்தால், கதிரியக்கம் தொடர்பான தீக்காயங்கள் மற்றும் இதர நோய்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் உள்ள இரும்புத்தாது அடர்த்தியை கண்டறிய இந்த கதிரியக்க மாத்திரை உபயோகப்படுத்தப்படும். இதனை, ஜனவரி 12ஆம் தேதி சுரங்கத்திலிருந்து எடுத்து, ஜனவரி 16ம் தேதி சேமிப்பு கிடங்கில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்பு, ஜனவரி 25ஆம் தேதி சேமிப்பு கிடங்கில் நடத்தப்பட்ட ஆய்வில், கதிரியக்க பொருள் மாயமானது தெரியவந்துள்ளது.