பாம்பே டையிங் தலைவர் நஸ்லி வாடியா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் 8.69 சதவீத பங்குகளை முறைகேடாக கையாடல் செய்ததாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பங்குகள், தற்போதைய மதிப்பின் படி சுமார் ₹1.2 லட்சம் கோடி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கஜ் பட்னிஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 1920-ஆம் ஆண்டு முதல் எஃப்.இ. தின்ஷா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பங்குகள், 1970-களில் நஸ்லி வாடியா இந்திய அறக்கட்டளையின் நிர்வாகியாக இருந்தபோது, ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திற்கு மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பங்கு பரிமாற்றத்தில் போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் இந்த பரிமாற்றம் நடைபெற்றதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. முக்கிய அறங்காவலர் பச்சூபாய் வொரோன்சோவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது ஆகஸ்ட் 1, 2003 அன்று ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணமடைந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு இந்த குற்றச்சாட்டுக்களில் முதற்கட்ட ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. மேலும், தின்ஷா அறக்கட்டளைக்கு சொந்தமான 3 கோடி சதுர அடி நிலத்தை ரஹேஜா குழுமம் மேம்படுத்தியதிலும் மோசடி நடந்திருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.