மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, ககன்யான் திட்ட பரிசோதனையை இஸ்ரோ நடத்தியது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் பரிசோதனை அக்டோபர் 21 மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆளில்லா விண்கலமான டிவி டி1, ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, மீண்டும் பத்திரமாக கடலில் தரை இறக்கப்பட்டது. ககன்யான் திட்டம், திட்டமிட்டபடி 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில், சுற்றுவட்ட பாதையில் விண்கலம் அனுப்பப்படும். மூன்று விண்வெளி வீரர்கள் அதில் பயணித்து, சுமார் மூன்று நாட்களுக்கு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாக தரையிறக்கப்படுகின்றனர். அக்டோபர் 21 அன்று, திட்டமிட்ட நேரத்தில் சோதனையை தொடங்க முடியாமல் போனது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு நேரிட்டது. அதனைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால், அந்நாளின் பிற்பகுதியில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,, வெற்றி கிடைத்துள்ளது. ககன்யான் பரிசோதனை வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.














