இஸ்ரேல் நாட்டில், செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. அதன் 90.7% வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களில் வெற்றி பெற்று, லீகுய்ட் பார்ட்டியைச் சேர்ந்த நெதன்யாகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது. இதற்கான வெற்றி கொண்டாட்டங்களில் அவரது கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவரது கூட்டணி கட்சியான ரிலீஜியஸ் ஜியோனிசம் பார்ட்டியின் துணையுடன் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்தக் கட்சி 14 இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் கட்சி அடிப்படைவாத கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து பேசிய ரிலீஜியஸ் ஜியோனிசம் பார்ட்டியின் தலைவர் பென் கிவிர், “என்னை வெறுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், தனது மனைவி சாராவுடன் லீகுய்ட் பாட்டியின் அலுவலகத்திற்கு நெதன்யாகு வந்திருந்தார். அப்போது, இந்த வெற்றி நம்பிக்கை தருவதாகக் கூறி, ஆதரவளித்த அனைத்து இஸ்ரேல் மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையில், 61- 62 இடங்களை நெதன்யாகுவின் கட்சி வென்ற உடனேயே மக்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர். ஆனால் இடைக்காலப் பிரதமராக உள்ள யாயிர் லீப்பட், முழுமையாக வாக்கு எண்ணிக்கை நிறைவடையாததால், இறுதி முடிவு வரும் வரை காத்திருக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு இஸ்ரேல் - பாலஸ்தீன பிரிவினை விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், “இஸ்ரேலின் நீண்ட காலப் பிரதமர்” என்ற வரலாற்றைப் பெற்றவராவார். கடந்த 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2020 வரையும், இஸ்ரேலின் பிரதமராக பொறுப்பு வகித்தார். அதன் பின்னர், கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற தேர்தல்களில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இறுதியாக, செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் லீகுய்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையை வென்றுள்ளன. அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.














