கடந்த ஏப்ரல் மாதத்தில், பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் 68% சரிவடைந்து உள்ளதாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 6480.3 கோடி ரூபாய் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாதாந்திர முதலீட்டு திட்டம் (எஸ்பிஐ) மூலம் 13727.63 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 14276.06 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி வெங்கடேஷ், "கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த மாதாந்திர முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 6.36 கோடி ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 6.42 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டின் இறுதியில், 17000 கோடி வரை முதலீடுகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை, அதிக விடுமுறை தினங்கள் இருந்ததால் முதலீடுகள் குறைந்துள்ளது" என்று கூறினார்.